இலங்கை அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் – பழிவாங்கும் வகையில் திட்டமிட்டு என் மீது அநாவசியமான – பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை அடியோடு நிராகரிக்கின்றேன். உண்மைத்தகவல்கள் அதில் மறைக்கப்பட்டுள்ளன.
எனது ஆட்சியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றபடியால் என் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்பில் முன்னரே நான் அறிந்திருக்கவில்லை. அதேவேளை, இந்த தாக்குதல் நடக்கும்போது நான் நாட்டிலும் இருக்கவில்லை.
எனினும்,தாக்குதல் சம்பவத்தை அறிந்தவுடன் உடனே நாடு திரும்பி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். தாக்குதலின் எதிரொலியாக இன ரீதியில் – மத ரீதியில் அரங்கேறக் காத்திருந்த வன்முறைகளைத் தடுத்திருந்தேன்.
விசாரணை ஆணைக்குழு முன் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தெரிவித்திருந்தேன். ஆனால், விசாரணை அறிக்கை அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்கும் வகையில் வெளிவந்துள்ளது. எனினும், எதற்கும் நான் அஞ்சவேமாட்டேன். நான் பொறுமையுடன் இருக்கின்றேன்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை பல அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிராகரித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.