July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கார்கில்ஸ் கட்டட திரையரங்கு சென்று வந்தவர்களை சுகாதாரப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்கிற்கு கடந்த இரண்டு வாரங்களில் சென்று திரும்பியவர்களில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய கோரோனா தொற்று அறிகுறிகள் உள்ளோர் தமது பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான “021 2226666” என்ற தொலைபேசி இலக்கத்துடன் தோடர்புகொண்டு அறிவிக்கும்படி மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு கோரோனா தோற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்படுள்ள நிலையில் திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களில் திரையரங்கு சென்று திரும்பியவர்களில் காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு இன்று கோரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவ்வாறு மன்னாரில் 12 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்தவரும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியையும் அடங்குகின்றனர்.

குறித்த ஆசிரியை நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பேருந்தில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்களாவர்.

மேலும் மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிரடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புடைய இருவரும் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.