January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மனிதநேயத்தை அங்கீகரிக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மூலமே சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்”

மனிதநேயத்தின் மதிப்பை அங்கீகரிக்கும் உண்மையான சர்வதேச ஒத்துழைப்பு மூலமே எல்லைகள் கடந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி வர்ண விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில், நாட்டுக்காக செய்த சிறந்த சேவையை பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப் பிரிவுகளுக்கு ஜனாதிபதியினால் வர்ண விருதுகளை வழங்கி வைக்கப்பட்டது.

‘சுரகிமு லகாம்பர’ என்ற கருப்பொருளின் கீழ் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படையின் 05 ஆம் இலக்க போர் படை மற்றும் இலங்கை விமானப்படையின் 06 ஆம் இலக்க போக்குவரத்து ஹெலிகப்டர் படைப்பிரிவுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

இதன்போது தாய்நாட்டின் அமைதிக்காக உயிரை தியாகம் செய்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விமானப்படை வீரர்களுக்கு தேசத்தின் மரியாதையை செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உட்பட ஆயுதப்படைகளின் முதன்மைப் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக வருகை தந்துள்ள, வெளிநாட்டு விமானப்படை வீரர்களை பாராட்டிய ஜனாதிபதி, நாடுகளுக்கிடையிலான நட்புறவு இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவதாகவும் அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.