இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கெரவலப்பிட்டியவில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ளதுடன், இதன் முதற்கட்ட நிர்மானப் பணிகள் 21 மாதங்களில் நிறைவடையவுள்ளது.
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தேசிய மின் கட்டமைப்பில் 350 மெகாவொட் மின்சாரம் இணைக்கப்படவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய நடவடிக்கையெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டியவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நாட்டில் நிலவும் மின்சாரத்திற்கான கேள்வியில் 13 சதவீதம் பூர்த்திசெய்யப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நாட்டில் 99.8 சதவீதமானோருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சுமார் 84000 பேர் வரையிலானோரே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதமர், இவ்வாண்டுக்குள் மின் விநியோகம் 100 சதவீதமாக பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா, மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத், லக்தனவி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் யூ.டீ.ஜயவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.