
விடுதலைப் புலிகளைப் பற்றி ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப் புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களை விரைவில் கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, பாராளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் குறித்து பேசினால் அவர்களின் கட்சி உறுப்புரிமையைக் கூட ரத்து செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஆராயப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஜெர்மனியில் எவ்வாறு நாஸி கட்சி பற்றியோ, ஹிட்லர் பற்றியோ பேசினால் அங்கு எவ்வாறு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ அதே போன்று இலங்கையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டாலும் கூட அவர்களின் கொள்கை இன்னமும் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரதிநிதிகள் இன்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே இவற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.