January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஜெனிவாவில் இந்தியா இலங்கைக்கு சார்பாகவே நடந்துகொள்ளும்”- அமைச்சர் சரத் வீரசேகர

இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.  இப்போது அமைதியாக இருந்தாலும் அவர்கள் எமக்கு சாதகமாகவே தீர்மானமெடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தியா எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இப்போது தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் உள்ளக அரசியல் நகர்வுகள் காணப்படும் என்றார்.

யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் தோற்றாலும் கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கை பொய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும். இந்த அறிக்கையை நாம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

பிரேரணையை நாம் நிராகரிப்பதாக தெரிவித்த பின்னரும் எமக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்துள்ளன. பிரதான நாடுகள் எம்முடம் உள்ளனர் என்பது எமக்கு தைரியமளிக்கின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.