October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் முதன் முறையாக அடக்கம் செய்யப்பட்டன!

இலங்கையில்  கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் நீண்ட நாட்களாக  கொரோனாவால் உயிரிழந்த தமது உறவுகளின் உடல்களை அடக்கம் செய்ய கோரி சிறுபான்மை மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

தேசிய மற்றும் சர்வதே அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எனினும் அடக்கம் செய்வதற்கான நிலப்பகுதி தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்தது.

ஒருவாராக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி வரை குறித்த இடத்தில் இரண்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை கொரோனாவால் மரணித்த ஏறாவூரில் உள்ள இரு சடலங்களும், காத்தான்குடியில் உள்ள மூன்று சடலங்களுமாக ஐந்து சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடக்கம் செய்வதற்காக ஆறு அடி ஆழம், ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம் ஆகிய அளவுகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழிகளும் மூன்று அடி இடைவெளியில் தோண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.