January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அனுசரனையில் ‘நேசக்கரம் பிரஜைகள் குழு’ அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அதற்கமைய நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இன்று வரை பூரணப்படுத்த முடியாத நிலையில் பயனாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இருப்பதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குடிசை வீட்டை அகற்றி தவித்து வரும் நிலையில் குறித்த வீட்டு திட்டத்தை துரிதமாக பூரணப்படுத்தி தரும்படியும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரை வழங்கும் நோக்கில் எதிர்பார்த்து காத்திருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராத நிலையில் ஆவேசத்துடன் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் மகஜரை பெற்றுக்கொண்டார்.

This slideshow requires JavaScript.