“இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் தாம் அமைச்சரை கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இரணைதீவு மக்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகளை சந்தித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அங்கு வாழும் மக்கள் அதற்கான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் காடாக இருந்த இரணைதீவில் தாம் சிரமங்களுக்கு மத்தியில் சுத்தம் செய்து அங்கு குடியேறி வசித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இரணைதீவு தமது பூர்வீக பிரதேசம் என தெரிவித்துள்ள அவர்கள் தொழிலுக்காகவும், பூர்வீக இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான ஆரம்ப வேலைகள் இரணைதீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தமக்கு கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
“ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அதனை அவர்களின் இடங்களில் அடக்கம் செய்யவேண்டும்” எனவும் இரணைதீவு பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமக்கு இரணைதீவிற்கு செல்வதற்கு கடுமையான தடைகளைக் கடற்படையினர் விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.