இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 6000 வாள்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் நீதியரசர் மாயாதுன்னே கொராயா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் ஆராயப்பட்டது.
இதன்போது மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? எனவும் அந்த விசாரணை தற்போது எந்த மட்டத்தில் உள்ளது என்றும் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் கேட்டறிந்து விளக்கமளிப்பதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய நீதிமன்றம், இம்மாதம் 31 ஆம் திகதி விளக்கமளிக்குமாறு அறிவித்துள்ளது.
இதேவேளை இதன்போது மனுதாரரான கொழும்பு பேராயர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே குறித்த வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டுமென்றும் நீதிமன்றத்திடம் கேட்டுகொண்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்களில் 600 வாள்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை மொஹமட் சத்தார் என்பவரினால் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் இன்ஷாத் என்பவரின் தேவைக்காக கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேலும் 5400 வாள்கள் நாட்டுக்குள் இருப்பதாகவும், இவை தேசிய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.