இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திலும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை யான மக்கள் எழுச்சிப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப்போராட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச.இராஜன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, கல்முனை இளைஞர் சேனை அமைப்பின் பிரதிநிதி பிரதீபன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த இந்த உணவு தவிர்ப்புப் போராட்டமானது பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
எனினும் பின்னர் திட்டமிட்டபடி இடமாற்றம் செய்யப்பட்டு இன்றைய தினம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.