கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா நகர் பகுதியில் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்தப் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளர் பிரிகேடியர் பிரதீப் கமகே, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த காணியை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதி நிதிகள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதன் போது ஜனாஸாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கொவிட் ஜனாஸாக்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளதாகவும் இந்த ஜனாஸாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.