
இலங்கையில் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐந்து மருத்துவமனைகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை மற்றும் இரணவில மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கொவிட் 19 உடனடி பதிலளிப்பு, சுகாதார கட்டமைப்பு தயார்படுத்தல் திட்டத்தின் பணிப்பாளரான வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.டி.எச் மருத்துவமனையில் தொற்று நோயாளிகளுக்கென 128 படுக்கைகள் கொண்ட, நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக் கூடி விசேட பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தொற்றுநோய் பரவல் நிலைமைகளின் போது மருத்துவமனை சேவைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் வீழ்ச்சியடையாமல் இருக்கவும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியான மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கும் வகையிலேயே இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.