Photo: Facebook/Sachithra Senanayake
தனது சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் ஒப்படைக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஎல் போட்டியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணய சதித் திட்டம் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக சசித்ர சேனாநாயக்க, விசேட பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்த போதே அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற எல்பிஎல் டி-20 போட்டித் தொடரின் போது, வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சசித்ர சேனாநாயக்கவிடம் அந்தப் பிரிவு விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இதன்படி நேற்றைய தினத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போது, 14 நாட்களுக்குள் தனது சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு விசாரணைப் பிரிவினர் அவருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.