January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐ.நா.வுடன் முரண்பட வேண்டாம்’

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சர்வதேசத்துடன் சுமுகமான தொடர்புகளைப் பேணினால் மாத்திரமே சர்வதேச நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் முதன் முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே ஐ.நா.விடம் உறுதியளித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் நாட்டுக்கு வந்தபோது தெரிவித்தார். இதன்போது மஹிந்த ராஜபக்சவே அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்பவே இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து , குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும், இலங்கை அதனைச் செய்யவில்லை. இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதியே இன்று இலங்கையின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகவே 2011 – 2014 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. தீர்மானங்களை முன்வைத்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே அன்று மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குச் சென்றார்.

2015இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் சர்வதேசத்தைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமான உறவைப் பேணினோம். எம்மால் செய்யக் கூடியவற்றையும்,செய்ய முடியாதவற்றையும் தெளிவுபடுத்தினோம்.

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டபோது, நாம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு விசாரணைகளின் ஊடாக தீர்வைக் காண்பதாகக் கூறினோம். இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தை ஒழித்துப் பெற்றுக்கொண்ட வெற்றியை முறையாக சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.