
கொழும்பைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஒட்சிசனின் அளவில் வீழ்ச்சியும், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வளிமண்டலத்தின் தன்மை தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரம் கடலுக்கு அண்மித்து இருப்பதால் இந்த அவதானம் ஏற்பட்டுள்ளதாகவும், அது இன்னும் மக்களால் உணரக்கூடிய நிலையை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு நகரில் வளி மாசடைதலைத் தடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சு மற்றும் கொழும்பு மாநகரசபையுடன் இணைந்து சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மாநகரசபையின் மேயர் ரோசி சேனாநாயக்க ஆகியோர் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் அதிகமாக மரங்களை நாட்டுவதன் மூலம் இந்த நிலைமையைச் சீர்செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் ஒட்சிசன் அளவை நாள் தோறும் அளவிடுவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.