
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது பதிலை, இணையத்தில் வெளியிடுமாறு கோரி அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதன்படி இலங்கை அரசாங்கத்தின் அந்த அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐநாவினால் வெளியிடப்பட்டுள்ள தகவலில், நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நேரத்தில் இது தேவையற்றது என்று வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவோ, மீளப்பெற்றுக்கொள்ளப்படவோ இல்லை என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மீளாய்வு செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டமா அதிபர் மீளாய்வு செய்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும் இலங்கை அரசாங்கம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.
அத்துடன் ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான சகல அறிக்கைகளும் தவறான அல்லது ஆதாரமற்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது ஐநா பொதுச்சபைத் தீர்மானம் (GA) 60/251 இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான முன்மொழிவு உட்பட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததுள்ளதாகவும் ஐநாவினால் இலங்கைகயின் பதில் அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.