July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்கிறார் மனோ கணேசன்

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்ததாகவும், இந்தத் தாக்குதல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலால் இந்த அரசாங்கம் நன்மையடைந்தது என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் பல உறங்கும் உண்மைகளும் வெளிவரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பலத்த கோரிக்கைகளின் பின்னரே ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானின் பயங்கரவாதக் கும்பலுக்கும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் தொடர்பில்லை என்பது உண்மையாக இருந்தாலும், தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் மீது கோபம் இருக்கும் போது மென்மையான இலக்குகளான கிறிஸ்தவ மக்களைத் தெரிவு செய்ய சஹ்ரான் கும்பலுக்கு இருந்த விசேட தேவை என்ன? என்பதற்கான விடை கிடைக்க வேண்டும் என்றும் மனோ கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த மக்கள் விடயத்தில் அரசியல் இலாபம் பெற எவருக்கும் இடம் கொடுக்க முடியாது என்றும் நியாயமான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.