கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடங்கம் செய்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மரணித்தவர்களின் உடல்களை படகுகள் மூலம் தீவில் இறக்கப்படும் பிரதான இறங்குதுறை மற்றும் அடக்கம் செய்வதற்காக குழிகள் வெட்டப்பட்டுள்ள பகுதிகளில் பிரதேசவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை முதல் பங்குதந்தையர்களின் ஆதரவுடன் பிரதேசத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தமது கோரிக்கைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடம் மகஜர்களையும் கையளித்திருந்தனர்.
எவ்வாறயினும் அங்கு உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் இருந்து பின்வாங்காத அதிகாரிகள், அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகளையும் வெளியிட்டு அங்கு குழிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் தமது கைவிடாது தமது போராட்டத்தை தொடந்தும் முன்னெடுக்கும் மக்கள் பிரதான இறங்குதுறை மற்றும் குழிகள் வெட்டப்பட்டுள்ள பகுதிகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.