இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை ஏற்பாடுகளின் பிரதிகள் 16 அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கருதுவதானால், அதுதொடர்பாக தாமதமின்றி சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என்று குறித்த நடைமுறை ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேதப் பெட்டியை குடும்பத்தினர் வழங்க வேண்டும் என்றும் இறுதிக் கிரியைகளில் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரேதங்கள் பொறுப்பேற்கும் நிலையங்களில் இருந்து தினசரி காலை 5.30 மணிக்கு பிரேத ஊர்திகள் நாச்சிக்குடா இறங்குதுறை (இரணைதீவு அருகே) நோக்கி புறப்படும்.
- மத ரீதியான இறுதிக் கிரியைகளை மருத்துவமனையில் மேற்கொள்ள நேரம் வழங்கப்படும்.
- அடக்கம் மேற்கொள்ளும் இடத்தில் உறவினர்கள் அல்லது வேறு நபர்களால் புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்ய முடியாது.
- பொது சுகாதார அதிகாரி, பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையின் கீழ் நல்லடக்கம் செய்யப்படும்.