January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனாஸா அடக்கத்துக்கு இரணைதீவை தெரிவு செய்தது ஏன்?’

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்;

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் தற்போது காணப்படும் நிலவரங்களை மேலும் குழப்பும் வகையிலேயே அரசின் தீர்மானம் அமைந்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களிலும்,பொதுவான ஆய்வுகளிலும் நிலத்தடி நீரினூடாக கொரோனா தொற்று பரவும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

எனினும், அது குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசு எதனடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகவில்லை.

அத்தோடு கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மேற்குலக சக்திகள் அழுத்தம் வழங்கிவந்தன.

இதன் காரணமாகவே அரசு சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியது. எனினும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்பு தென்படவில்லை.

அதுமாத்திரமன்றி சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே அடக்கம் செய்ய முடியும் அல்லவா? அவ்வாறிருக்கையில் குறிப்பாக அப்பகுதியைத் தெரிவு செய்ததன் காரணமென்ன? இந்தத் தீர்மானத்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.