May 23, 2025 0:16:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுத்த ஜனாதிபதி பஸில்; ஜே.வி.பி. தகவல்

ராஜபக்ச குடும்பத்துக்குள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள அதிகாரப் போட்டி தற்போது உக்கிரமடைந்துள்ளது என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் அதன் நிறுவுநர் பஸில் ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும், இதற்கான செயற்பாடுகளை அவர் தற்போதே ஆரம்பித்துள்ளார் எனவும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமது ஜனாதிபதிக் கனவை நனவாக்கும் நோக்குடன் தற்போதைய பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் மூத்த புதல்வனும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச ஆகியோரை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளையும் பஸில் ராஜபக்ச திரைமறைவில் அரங்கேற்றி வருகின்றார் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது தடவையாக போட்டியிடமாட்டார். எனவே, அவர் தனது பதவிக் காலம் முழுவதையும் அனுபவிப்பார்.

அவரையடுத்து பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்குவார்கள்.

இதேவேளை, பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நாம் நம்புகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.