July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை மனித உரிமைகள் ஆணையாளருக்கு இல்லை’

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் தமிழர் தரப்பும்,புலிகளின் ஆதரவு நாடுகளும் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கின்றனர்.இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணையாளருக்கு இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் உள்ளக பொறிமுறைகளின் மூலமாக உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கூட அதற்கு சர்வதேசமும், தமிழர் தரப்பும் இடமளிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற புலிகளின் அரசியல் கட்சிகள் இலங்கை குறித்த பொய்யான காரணிகளை சர்வதேசத்திற்கு கொண்டுசென்று இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.இப்போதும் தேசிய ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்தாலும் கூட சர்வதேசமும் தமிழர் தரப்பும் திருப்தியடையப்போவதில்லை.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணையை நாம் கருத்தில் கொள்ளாது இருப்பதே அரசாங்கமாக நாம் எடுக்கும் நகர்வாகும் என்றார்.

தமிழர் தரப்பு எதனைக் கூறிக்கொண்டு இருந்தாலும் அதனை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. அதுமட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணையின் மூலம் இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது, பிரேரணையுடன் நாம் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.