ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வு பிரிவினதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினதும் தலைவர்கள் அமைச்சரவையின் உப குழுவினால் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை உப குழு அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று கொழும்பில் கூடியபோதே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவையின் உப குழு ஆராய்ந்து வருகின்றது.
அத்தோடு இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபைக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் நகல் அனுப்பப்படாமையிட்டு மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுதல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் நகலை தமக்கு அனுப்பாமை மிகவும் வருத்தத்தை அளிப்பதாக இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையின் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடமும் , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அரசாங்கம் தனது பிரிவை தமது சங்க சபை புறக்கணித்துள்ளதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.