யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று இணங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், அதன்போது இணங்கியவாறு செயற்படுவதை தவிற இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே முன்னாள் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் விடயத்தை தற்போதைய அரசாங்கம் முறையாக கையாழுகின்றது என்று கருதுகின்றீர்களா? என்று அந்த நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதன்போது பதிலளித்த அவர், இலங்கை எந்தவொரு நாட்டுடனும் சண்டையிடாது இந்த விடயத்தை கையாள வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை இந்தளவுக்கு நெருக்கடி நிலைமையை சந்திக்க யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், ஐநா செயலாளர் நாயமும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இணங்கிய விடயங்களே காரணமாகும் என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்று மகிந்த ராஜபக்ஷ மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருக்காவிட்டால், தற்போதுள்ள அழுத்தங்கள் இருந்திருக்காது என்றும் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சர்வதேச சமூகத்துடன் எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்திக்கொள்ளாது செயற்பட்டோம். இதன்மூலம் ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையையும் அதிகரித்துக்கொள்ள முடியுமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம், ஐநா செயலாளர் நாயகத்துடனான கூட்டு அறிக்கைக்கு கட்டுப்பட்டுள்ளதால், அதனை செய்யாது அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.