மீண்டும் வடக்கில் பிரச்சனை நிலைமையொன்று ஏற்படுமாக இருந்தால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
“திலீபன் நினைவேந்தலை அனுமதிக்கக் கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?” என்று ஊடக தலைவர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
”அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.