January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் ‘சர்வதேசமே ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து’ என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சி இயக்கத்தின் சிவயோக நாதன் தலைமையில் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் காணாமல் போன உறவுகளின் சங்கத் தலைவி அமலநாயகி, மற்றும் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் உட்பட மத தலைவர்கள், கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர் எஸ்.சிவயோக நாதன், இதுவரை நீதி வழங்கப்படாமல் உள்ள உரிமைகளுக்காக போராடனோம் இன்று நீதி வேண்டிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

மனித உரிமைகள் சபையில் பூச்சிய வரைவுத் தீர்மானமானது தமிழ்மக்களுடைய எதிர்பார்ப்பையும் சர்வதேசத்தின் பொறுப்பு கூறலையும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக நீதி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழர்களின் நியாயமான கோரிக்கையான மரபுவழி தாயகம். சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் ஆகியவை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறிய அவர் இதற்கு ஆதரவு தருமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.