July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் முடிவு ‘முதற்கட்ட நடவடிக்கையே’ என்கிறது அரசு

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சுற்றறிக்கையை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணங்களை ஒவ்வொரு மாகாணத்திலும் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார சேவைகள் பணியகம் முன்னெடுத்து வருகின்றதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மாகாண மட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளடங்கிய குழு மூலம் பொருத்தமான நிலப் பகுதி தெரிவுசெய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அரச செலவில் அடக்கம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்வதாகவும், உறவினர்கள் இருவரின் பங்குபற்றலுடன் இறுதி மதக் கிரியைகளை மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.