கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட இந்தியா இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அனுமதியும் இந்திய நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி குறித்த செய்தியை கண்டு தாம் ஆச்சரியமடைவதாகவும் இந்தியாவின் அனுமதியே இல்லாது இந்திய நிறுவனம் அங்கீகரித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுவது வேடிக்கையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுக கிழக்கு முனையமே இந்தியாவின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தும் இருப்பதாகவும், மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இந்திய நிறுவனங்கள் இன்னும் ஈடுபாடுகளை காட்டவில்லை எனவும் இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையின் போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யும் என்ற தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதும் அரசாங்கம் இது தொடர்பான அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
இதனையடுத்தே தற்போது இந்திய தரப்பினர் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.