இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது.
இரணைதீவில் சடலங்களை புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு வலியுறுத்தி மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இரணைதீவு மக்கள் இணைந்து அரச திணைக்களங்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருக்கு மகஜர்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றையதினம் பூநகரி பிரதேச சபையினருக்கு குறித்த மகஜரை வழங்குவதற்காக சென்ற நிலையில் மகஜரை ஏற்றுக்கொள்வதற்கு பிரதேச சபையினர் முன்வரவில்லை.
எனினும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பிரதேச சபையானது பொதுமக்கள் விடயம் சார்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.