
கொழும்பு, பேலியகொட பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவனைத் தாக்கிய சந்தேக நபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்டக் கல்லூரியின் இறுதி வருட மாணவன் மிகாரா குணரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பேலியகொட பொலிஸ் நிலையத்தில், 10 க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் சித்திரவதை சட்டங்களின் கீழ் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, விசாரணைகளை பேலியகொட பொலிஸ் நிலையத்தில் இருந்து, விசேட புலனாய்வுப் பிரிவொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.