July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த அரசாங்கம் இந்தியா – சீனாவின் அடிமையாகிவிட்டது என்கிறார் ஓமல்பே சோபித தேரர்

தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அடிபணிந்து விட்டதாக பௌத்த மதகுரு ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் தேசிய வளங்களை விற்கும் கொள்கையிலே ராஜபக்‌ஷ அரசாங்கம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை மீட்கும் அமைப்பின் சார்பில் கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த வேளையில் நாம் தலையிட்டு முழுமையாக எமது வளத்தை மீட்டெடுத்தோம்.

அதன்பின்னர் மேற்கு முனையத்தை அதே உடன்படிக்கைக்கு அமைய வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயல்’ எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு துறைமுக உடன்படிக்கையிலும், தேசிய வளங்களை விற்கும் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூறியாக வேண்டும்.

தேசிய வளங்களை விற்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கான வெளிப்பாடே தற்போது அமைச்சரவை தீர்மானங்கள் மூலமாக வெளிப்பட்டு வருகின்றது.

எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நாசகார செயற்பாடுகளுக்கு நிச்சயமாக ராஜபக்‌ஷ அரசாங்கம் மக்களிடம் பதில் கூறியாக வேண்டும்.

அரசாங்கம் இப்போது விடும் தவறுகளுக்காக நிச்சயமாக மக்கள் கஷ்டப்பட வேண்டி வரும் என்பதை நாம் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.