தமது பாதுகாப்பை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டங்களின் துரைமார் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட துரைமார் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான பெருந்தோட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
‘தொழிலாளர் அராஜகம் ஒழிக’, ‘தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து’, ‘தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், அண்மையில் ஒல்டன் தோட்டத்தில் துரையின் வீடு தேடி சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நாங்கள் தோட்டங்களை பாதுகாத்து பணிபுரிவதற்கே வந்துள்ளோம். ஆகவே எங்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது அவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் “வன்முறைகளில் ஈடுபட்டால் இந்த நாட்டின் பொருளாதாரமும் அவர்களின் பொருதாரமும் தான் பாதிக்கும்.
கடந்த காலங்களில் கொழும்புக்கு தேயிலை கொண்டு சென்ற லொறி ஒன்றினை ஹட்டன் பகுதியில் ஒரு பிரதே சபைத் தலைவர் ஒருவர் திருப்பி அனுப்பி வைத்தார்.
இந்த நஷ்டத்தினை யார் கொடுப்பது ஆகவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றோம். ஆகவே தொழிற்சங்கங்களும் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும் எனவும் தோட்ட அதிகாரிகளின் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.