July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இரணைதீவை கொவிட் தொற்றின் புதைகுழியாக்க வேண்டாம்’: பிரதேச மக்கள் போராட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு  மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் இரணைமாதா நகர் இறங்குதுறையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி கடந்த வாரத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையில், சுகாதார முறைப்படி உடல்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவில் இடத்தை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சிறிய தீவான இரணைதீவில் பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு உடல்களை அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி அந்த பிரதேச மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

தமது பிரதேசத்தில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று கோரி மாகாண ஆளுனர் மற்றும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் மகஜர்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.