January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் பயணப் பொதிக்குள் இருந்த சடலத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

கொழும்பு டேம் வீதி பகுதியில் பயணப் பொதிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் குருவிற்ற பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண் கொலை செய்யப்பட்டே பயணப் பொதியில் போடப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான புத்தள பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்றைய தினத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை டேம் வீதி பகுதியில் வீதியோரத்தில் கிடந்த பொதியொன்றுக்குள் இருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் அது தொடர்பாக பல கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிசிடிவி வீடியோக்களை பரிசோதித்த சிஐடியினர் ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து நபரொருவர் பஸ்ஸொன்றில் அந்தப் பயணப் பொதியை கொண்டு வந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இதன்படி ஹங்வெல்ல பிரதேசத்தில் ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த புத்தள பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 52 வயதுடைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே அதனுடன் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் குருவிற்ற பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணை காதலித்துள்ளதாகவும், அவருடன் ஹங்வெல்ல பகுதியிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போது பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் அவர் தலைமறைவாக இருந்த இடத்திற்கு சென்ற போது, சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.