ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளையும் அவர்களுக்கு உதவியவர்களையும் ஏன் இன்னும் சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது உள்ளது என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விசாரணை அறிக்கைகளை பார்க்கும் போது, தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரியவில்லை என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களான குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இந்த விடயத்தில் ஆழமான விசாரணைகளை நடத்தியதா? என்ற சந்தேகங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளில் உயர் அதிகாரிகளினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றனவா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், அவ்வாறு இல்லையென்றால் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர முடியாமைக்கு என்ன காரணம் என்பதனை விசாரணை நடத்துபவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுமென்று பேராயர் மெல்கம் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.