
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை ஆராய்ந்த “ஜனாதிபதி ஆணைக்குழுவை கடந்த அரசாங்கமே நியமித்தது. அது ஒரு சுயாதீன ஆணைக்குழுவாகும். அதன் அறிக்கை தொடர்பாக விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவ்விடயத்தில் அரசாங்கத்தினால் தலையிட முடியாது” என்று அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி அறிக்கையில் பிரச்சினைகள் இருந்தால் கலந்துரையாட முடியும் என்றும் அது தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவையின் உப குழுவும் ஆராய்ந்து வருகின்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.