January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் வடக்கு- கிழக்கில் ஐநா மனித உரிமை அலுவலகங்களை நிறுவ வேண்டும்’: அன்புமணி ராமதாஸ்

(Photo:Anbumani Ramadoss/Facebook)

இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை நிறுவவேண்டும் எனவும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் எனவும் தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவைக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அடிப்படை உரிமைகளுக்காகவும் ஜனநாயக அதிகாரத்திற்காகவும் பெரும் போராட்டத்தை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் இனவெறி அரசாங்கம் அவர்களது வேண்டுகோளை நிராகரிப்பதுடன் மாத்திரமில்லாமல் அவர்களை தொடர்ச்சியான இனவெறி துஷ்பிரயோகங்களுக்குட்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு இனச்சுத்திரிகரிப்பு, திட்டமிடப்பட்ட இனஅழிப்பு ஆகியவற்றையும் முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் கள அலுவலகங்களை இலங்கையின் வடக்கு-கிழக்கில் ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமையை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையை பொருத்தமான சர்வதேச பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி,  இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உறுதிப்பாட்டை உறுதிசெய்து ஒரு வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற உறுப்பு நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும்  அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.