July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெள்ளை வேன் ஊடக சந்திப்பு’: ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூம் ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் நீதியரசர் தமித் தொடவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்த வழக்கை ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

2019 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த இருவர், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது வெள்ளை வேன் கடத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தங்கங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்தியதாக கூறப்படும் விவகாரம் கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டதாக கூறியிருந்தனர்.

அத்துடன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் வெட்டப்பட்டு, முதலைகளுக்கு உணவாக வீசப்பட்டதாகவும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து 2019 டிசம்பர் மாதத்தில் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்த குறித்த நபர்கள் இருவரும், அதனை ஏற்பாடு செய்திருந்த ராஜித சேனராட்ன மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் மொஹமட் ரூம் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி இன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இது தொடர்பான ஆவணங்களை கையளிக்க வேண்டியுள்ளதாகவும் அதற்காக ஒரு மாத கால அவகாசத்தை வழங்குமாறும் சட்டமா அதிபர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதியரசர் அதற்கு அனுமதி வழங்கியதுடன், வழக்கை மீண்டும் ஏப்ரல் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.