கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி- இரணை தீவுப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்தோடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக இரணை தீவு அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாஸா அடக்கம் செய்வது தொடர்பாக முஸ்லிம் மக்களால் பல்வேறு பகுதிகளை சுட்டிக்காட்டியபோதும் பல கட்ட போராட்டங்களின் பின்னர் மீள் குடியேறிய இரணை தீவு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானமானது வருத்தம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு 165 குடும்பங்கள் கடல் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் புதன் கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.