November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணை தீவில் ஜனாஸா நல்லடக்கம்: தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத் தமிழ்- முஸ்லிம் மக்களின் உறவைப் பிரிக்க அரங்கேற்றப்படவுள்ள சதித்திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவர்களின் சொந்த இடங்களிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாஸாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரணை தீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“கொரோனா மரணங்களைக் கையாளும் விடயத்தில் அரசாங்கம் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைந்துள்ளது” என்று ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணை தீவைத் தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதனை அணுக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.