November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘இரட்டை-பயன்பாடு’ வாகன பதிவில் முறைகேடு

இலங்கையில் விசேட செயற்திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இரட்டை பயன்பாடுடையவைய பதிவு செய்வதனால் அரசாங்கத்துக்கு ஏற்படும் வருமான இழப்பு தொடர்பில் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் விசேட உப குழுவொன்றை அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தினால் விசேட செயற்திட்டங்களுக்கான வாகனங்களை கண்டறியும் எச்.எஸ். குறியீடு முறைக்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட செயற்திட்டங்களுக்கான வாகனங்களை கண்டறியும் முறைக்கும் இடையிலான சட்டரீதியான வேறுபாடுகள் கவனம் செலுத்தப்பட்டது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகனங்களை பதிவு செய்யும் போது சுங்க திணைக்களத்தினால் வழங்கப்படும் எச்.எஸ். குறியீட்டை (HS Code) கருத்தில் கொள்வதில்லை.

இவ்வாறு வாகனங்கள் இரு வேறு விதமாக பதிவு செய்யப்படுவதால் அரசங்கத்துக்கு கிடைக்கவேண்டிய பாரியளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட உப குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இவ்வாறான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் சான்றிதழொன்றை பெறவேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரை தொடர்பிலும் கோபா குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தக் குழுவின் அறிக்கையை சட்டமொன்றாக மாற்றுவதன் அவசியமும் குறித்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்புபட்ட சட்டங்களின் மறுசீரமைப்பின் முக்கியத்துவமும் கலந்துரையாடப்பட்டது.