January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கே இரணை தீவு ஜனாஸா புதைப்பு விவகாரம்’ -சிறிதரன்

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியே இரணை தீவு ஜனாஸா புதைப்பு விவகாரம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

இதன்போது, பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களும், தமிழ் மக்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசம் இரணை தீவு. இந்த பிரதேசத்திலேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்வது என்பது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும் என்பதுடன் சிறுபான்மை இனங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை சிங்கள அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்று தமக்கு சாதகமாக்கிக்கொள்வதற்கு அரசு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது முஸ்லிம்கள் தங்களுடைய ஜனாஸாவை கொஸ்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தபோதும் இரணை தீவு பகுதியிலே அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாஸா புதைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டால் அதற்கு ஆதரவாக செயற்படுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிறிதரன்,

அரசு குறித்த நடைமுறையை அமுல்படுத்துமேயானால் இந்த விடயம் தொடர்பில் நிதானமாகவே சிந்தித்து செயற்படுவோம் எனவும் போராட்டங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட விடயங்களை அந்தந்த நேரங்களில் ஆராய்ந்தே செயற்படுவோம் எனவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.