கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சிலர் தடுப்பூசிளை பெற்றுக்கொள்ள முனைவதாகச் சுகாதார அதிகாரிகள் அண்மைக்காலமாக விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இதுபோன்ற நடத்தைகளைத் தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன டெய்லி மிரர் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இவ்வகையான செயற்பாடுகள் காரணமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உடையவர்களுக்கு அநீதி இழைக்கப் படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி திட்டத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசங்கம் தலையிட்டு தீர்வை வழங்கும்படியும் வேண்டியுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு அழுத்தங்களை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன டெய்லி மிரர் பத்திரிகையிடம் வலியுறுத்தினார்.
அதேவேளை இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.