இலங்கைக்கு மீது ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றுவதன் ஊடாக நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனக் கருதுவது தவறானதாகும் என்று இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், வெளியுறவு செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அவகாசத்தை வழங்குவதே சர்வதேசத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதன் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று ஐநா மனித உரிமைகள் பேரவை அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் நினைக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும், 15 நாடுகளே எதிராக உள்ளதாகவும் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.