
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர்கள் திசை மாறி பயணிப்பதால், எமது மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஒவ்வொரு தரப்பும் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், இழந்த இடத்தை மீண்டும் பெறுவதற்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உணர்வுகளைத் தூண்டி அவர்களை உணர்ச்சி வசப்படுத்துகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தோடு இந்த விடயமானது தமிழ் மக்களை மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. அடிப்படை மனித உரிமை மீறல் பற்றி பேசுபவர்கள் தாங்களும் ஓரளவுக்காவது அவைகளை மீறாமல் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘தமிழ் இனத்தின் அழிவிற்கு பல்கலைக்கழக மாணவர்களை எந்த வகையிலும் ஏற்க முடியாத அளவிற்கு உபயோகித்துள்ளனர்.
இவ்வாறு அப்பாவி மக்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தியவர்கள், அதனை தட்டிக்கேட்காதவர்கள் எவ்வாறு ஜநாவில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப்பற்றிப் பேசமுடியும்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனையடுத்து ‘அறிவை தாமும் வளர்த்து ஏனையோரின் அறிவையும் வளர்க்க வேண்டிய எதிர்காலத் தலைவர்கள் தான் பல்கலைக்கழக மாணவ சமுதாயம்.
அவர்களை தம் கடமையை செய்ய விடாது 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க பயன்படுத்திக் கொண்டனர்.
தமிழ்த் தலைவர்கள் தாமும் தடம் புரண்டு தமிழ் மக்களையும் தடம் புரள வைத்து இலங்கையில் ஆண்டாண்டு காலமாக பெருமையுடன் வளர்ந்து வந்த ஜனநாயகத்தை இல்லாதொழித்து அதிகளவான தமிழ் மக்களின் வாக்குகளை பலாத்காரமாகவும், முறை தவறியும் உபயோகித்து தமிழினத்திற்கே அவமானத்தை தேட காரணமாக இருந்தார்கள்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘தமிழ் மக்கள் இனியும் ஏமாறாது எம்முடன் இணைந்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட விரும்புபவர்களை எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைக்கின்றோம் எனவும் ஆனந்த சங்கரி இதன்போது தெரிவித்துள்ளார்.