யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் 8 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூரமாகத் தாக்கும் காணொளியொன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வந்தததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு இன்று சென்று குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதன்போது விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன்புறுத்தப்படுவதை காணொளியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தில் 24 வயதான இந்தப் பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து குழந்தையுடன் நாடு திரும்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது பொலிஸார் குழந்தையைப் பொறுப்பேற்றுள்ளதுடன் குறித்த பெண்ணுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.