யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பவற்றுக்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டன.
அத்தோடு தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.