November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

file photo: Facebook/ Sri Lanka Ports Authority

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா மற்றும் ஜப்பானுடனான முத்தரப்பு உடன்படிக்கையில் இருந்து விலகி, ஒரு மாதத்தின் பின்னர் மேற்கு முனையத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனம் அரச- தனியார் வர்த்தகமாக இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் மற்றும் ஜப்பான் தூதரகம் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்நாட்டு முகவராக ஜோன் கீல்ஸ் நிறுவனம் செயற்படவுள்ளது.

இந்த முத்தரப்பு உடன்படிக்கை 35 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.