January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐ.நாவில் இந்தியா பார்வையாளராக இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்’

ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமை தாங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உட்பட நாடுகள் முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா பார்வையாளராக இல்லாமல், ஈழத்தமிழர்களுக்கு நீதியியை பெற்றத்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.

ஐ.நாவின் ஆணையர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்கள் குறிப்பிடுவது போல், இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்தியா அரசு துணைபுரியவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு- கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் பாரப்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை, இலங்கை அரசு தூக்கியெறிந்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களின் பாரப்பரிய தேசத்தை சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டுவருகின்ற சிங்கள குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் தடுத்து நிறுத்தும் படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தை சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமை இந்தியாவுக்கு இருப்பதாக குறித்த அறிக்கையில் வலியுறுத்தி நிற்கின்றது.

யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத்தமிழர்களின் இறமைக்கு முரணானது மற்றும் தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.